20 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய பாகம்பிரியாள் கோயில் குளம் மகிழ்ச்சியில் பக்தர்கள்

திருவாடானை, ஜன.20:  திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் குளம் 20 ஆண்டுக்கு பிறகு நிரம்பி வழிவதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மிக நாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளியூர் பக்தர்கள் வந்து இரவு தங்கி சாமி கும்பிட்டு செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் கோயிலுக்கு முன்பாக அமைந்துள்ள வாசுகி தீர்த்தம் என்று அழைக்கப்படும் குளத்தில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த குளம் 20 ஆண்டுகளுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு பெய்யும் சிறிய அளவிலான மழையில் கால் அல்லது அரை பங்கு அளவில் தண்ணீர் தேங்கியிருக்கும். சில வருடத்தில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு தொடர் மழை பெய்து, அதன் காரணமாக கோயில் குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரம்பி விட்டது. பக்கத்தில் இருக்கும் கண்மாய்க்கும் கோயில் குலத்திற்கும் இடையே பெரிய தூம்பு ஒன்று போடப்பட்டுள்ளது. கண்மாய் தண்ணீர் பெருகியதால் அதிலிருந்து அழுத்தமாக கோயில் குளத்திற்கு தண்ணீர் வந்து நிரம்பி விட்டது. இதனால் குளத்தின் மேல்பரப்பில் இருந்து படித்துறை வழியாக தண்ணீர் நிரம்பி சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் தண்ணீரைப் பார்த்து மகிழ்ச்சியுடன் குளித்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

Related Stories:

>