58 கிராம கால்வாயில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க கோரி அதிமுக எம்எல்ஏ.வை விவசாயிகள் முற்றுகை உசிலம்பட்டி அருகே பரபரப்பு

உசிலம்பட்டி, ஜன.20: உசிலம்பட்டி அருகே 58 கிராம கால்வாயில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் அதிமுக எம்எல்ஏ நீதிபதியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உசிலம்பட்டி அடுத்த உத்தப்பநாயக்கனூர் அருகே வைகை அணையிலிருந்து 58 கிராமக்கால்வாயில் நேற்று தண்ணீர் வந்தது. இதனை உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி தலைமையில், உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா, மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், செல்லம்பட்டி ஒன்றியசெயலாளர் ராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். அப்போது அப்பகுதியிலுள்ள விவசாயிகள் திடீரென எம்எல்ஏ.வை முற்றுகையிட்டனர்.

அப்போது விவசாயிகள் கூறுகையில், ‘‘58 கிராமக்கால்வாயில் சோதனை ஓட்டம் என்ற பெயரில் மூன்று தடைவை உசிலம்பட்டி கண்மாய் வரை தண்ணீர் சென்று விட்டது. ஆனால் எங்கள் பகுதியிலுள்ள கண்மாய்களுக்கு இதுவரை தண்ணீர் திறந்துவிடவில்லை. உத்தப்பநாயக்கனூர் அருகே வாடிப்பட்டி பிரிவில் 20க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய ஷர்ட்டர் இங்குதான் உள்ளது. இந்த ஷட்டரை திறந்து விட்டால் லிங்கப்பநாயக்கனூர், சுளிஒச்சான்பட்டி, திம்மநத்தம், நல்லொச்சான்பட்டி, பாப்பாபட்டி, பசுக்காரன்பட்டி, கொப்பிலிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்கள் பெருகி விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்’’ என தெரிவித்தனர்.

 இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அலுவலகம் சென்று பேசி கூறுகிறேன் என்று  எம்எல்ஏ கூறினார். அதற்கு மறுத்த விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேரடியாக நாங்கள் பேசி ஆக வேண்டும் என்று கூறினர். அதன்பின்பு எம்எல்ஏ நீதிபதி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், டிஎஸ்பி ராஜன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தற்போது குறைந்த அளவே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, 300 கன அடியாக வரும்போது, பிரித்து கொடுத்தால் கண்மாய்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர். அதற்கு விவசாயிகள், நீங்கள் தண்ணீர் அதிரித்து திறந்து விட முயற்சிக்கும் போது 58 கிராமக்கால்வாயிலேயே தண்ணீர் நின்று விடும். எனவே எங்களுக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்றனர். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தனர். இதையடுத்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>