×

சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் 27ம் தேதி தங்கதேரோட்டம்

அலங்காநல்லூர், ஜன.20: அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை 9 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெறும். பின்னர் உற்சவருக்கு மஹா அபிஷேகமும் யாகசாலை பூஜைகளும் நடைபெறும். மாலை 6 மணிக்கு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். நாளை மாலை 6 மணிக்கு காமதேனு வாகனத்திலும், 22ம் தேதி மாலை ஆட்டு கிடாய் வாகனத்திலும், 23ம் தேதி மாலை பூச்சப்பர விழாவும், 24ம் தேதி மாலை யானை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

25ம் தேதி மாலை பல்லக்கு வாகனத்திலும், 26ம் தேதி மாலை குதிரை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறும். 27ம் தேதி காலை 10.30 மணிக்கு  தங்கதேரோட்ட விழாவும் மாலை 6 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறும். 28ம் தேதி காலையில் யாகசாலை பூஜைகள் தீர்த்தவாரி பூர்ணகுதி அபிஷேகமும், 10.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறும்.  11 மணிக்கு கொடி இறக்கம் நடைபெறும். மாலை 6 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் இருப்பிடம் சேருவதும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Sholaimalai Murugan Temple ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...