×

குமரியில் ஒரே நாளில் 141 பேர் கொரோனா தடுப்பூசி போட்டனர் 3 வது நாள் அதிகரிப்பு

நாகர்கோவில், ஜன.19: குமரி மாவட்டத்தில் நேற்று 141 பேர், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் போடும் பணி கடந்த 16ம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் செண்பகராமன்புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் தடுப்பூசிக்கான முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மையத்தில் 100 பேர் வீதம், ஒரு நாளைக்கு 400 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இடையே ஆர்வம் குறைவாக உள்ளது. முதல் நாள் 55 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 2 வது நாள் 44 மட்டுமே தடுப்பூசி போட்டனர்.

இரு நாட்களில் 99 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 400 பேருக்கு திட்டமிடப்பட்டது. ஆனால் பெயர் பதிவு செய்தவர்கள் ஊசி போட முன்வர வில்லை. இதனால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பெயர் பதிவு செய்தவர்களுக்கு  ஊசி போடுவதற்கான நேரம், நாள் ஆகியவை எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே அந்தந்த தேதியில் தான் ஊசி போட வேண்டும் என்பது இல்லை. முன் கூட்டியே வேண்டுமானாலும் ஊசி போடலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 3 வது நாள் தடுப்பூசி முகாம் காலையில் தொடங்கியது. இதில் ஆர்வமாக பலர் முன் வந்து ஊசி போட்டனர். குறிப்பாக செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள், தனியார் மருத்துவமனை பணியாளர்களும் வந்து தடுப்பூசி போட்டுக் ெகாண்டனர். அந்த வகையில் நேற்று மட்டும் மொத்தம் 141 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் 86 பேரும், குழித்துறை அரசு மருத்துவமனையில் 18 பேரும், செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 23 பேரும், பத்மநாபபுரத்தில் 14 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும்  கடந்த 3 நாட்களில் 240 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இன்று 4 வது நாள் மாநகராட்சி பணியாளர்கள் அதிகம் பேர் தடுப்பூசி போட உள்ளனர். எனவே  எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறினர்.

கொரோனா வார்டில் புகுந்த பாம்பு
குமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு, 16,600 ஐ கடந்துள்ளது. இவர்களில் சுமார் 140 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டு, பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டு ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மருத்துவக்கல்லூரியில் உள்ள பெண்களுக்கான கொரோனா வார்டு கழிவறையில், நேற்று காலை பாம்பு புகுந்தது. இதை பார்த்த பெண்கள் அலறினர். பின்னர் பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்த பணியாளர்கள் பாம்பை பிடித்து சென்றனர்.

Tags : Kumari ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...