×

தமிழகத்தில் கூட்டு ெகாள்ளை அடிப்பதாக பேசிய ஆடிட்டர் குருமூர்த்தியை அமைச்சர்கள் கண்டிக்காதது ஏன்? இ.கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி

நாகர்கோவில், ஜன.19 : ஆடிட்டர் குருமூர்த்தியை அமைச்சர்கள் கூட கண்டிக்காதது ஏன்? என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். 9 கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளன. மத்திய அரசு பிடிவாதத்தை கைவிட வேண்டும். வேளாண் சட்டங்களை கைவிட கோரி 26ம் தேதி நாடு முழுவதும் நடக்க உள்ள டிராக்டர் பேரணியை தடுத்து நிறுத்தும் முயற்சியில் மத்திய அரசு கோர்ட் மூலமாக ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்திலும் டிராக்டர் பேரணி நடைபெறும்.

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரியாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ₹30 ஆயிரம் வழங்குவதுடன், விவசாய கடனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார். அவர் பிரதமரை சந்திக்கும் போது, தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை கேட்டுப்பெற வேண்டும். தராவிட்டால் தமிழகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டி, நிர்ப்பந்தம் அளிக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை நகர்ப்புறங்களுக்கு கொண்டு வருவதுடன், ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும்.

சென்னையில் நடந்த விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி,  நீதிபதிகளை விமர்சித்து பேசியுள்ளார். சசிகலாவையும் விமர்சித்துள்ளார். தமிழக அமைச்சர்கள் கூட்டு கொள்ளை அடிக்கிறார்கள் என்று அரசுக்கு ெசாந்தமான கலைவாணர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். ஆனால் அதற்கு முதலமைச்சரோ, அமைச்சர்களோ மறுப்பு அல்லது கண்டனம் தெரிவிக்கவில்லை. எனவே இந்த கூட்டு கொள்ளை உண்மையாக இருக்குமோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தெளிவான தீர்ப்பை அளிக்க தயாராகி விட்டனர். தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சி அமோக வெற்றி பெறும். பா.ஜ.வை மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகே உள்ள ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து வாகன பிரசார இயக்கத்தை முத்தரசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து  நித்திரவிளையிலும் பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
நித்திரவிளையில் நடந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் துரைராஜ் தலைமை  தாங்கினார்.

பூதப்பாண்டியில் ஜீவா சிலையில் கூண்டு அமைக்க கூடாது
முத்தரசன் நிருபர்களிடம் கூறுகையில், பொதுவுடமை வாதியான ஜீவானந்தம் அனைத்து தரப்புக்கும் பொதுவானவர். எந்த சமயத்தையும் சார்ந்து இல்லை. பூதப்பாண்டியில் உள்ள அவரது சிலைக்கு கூண்டு அமைக்க வேண்டும் என போலீசார் கூறி உள்ளனர். ஜீவா சிலையை கூண்டுக்குள் அடைப்பதை ஏற்க முடியாது. இந்த நடவடிக்கையை போலீசார் கைவிட வேண்டும் என்றார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் எஸ். இசக்கிமுத்து, மாவட்ட பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட குழு உறுப்பினர் ஆர். இசக்கிமுத்து, கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைவர் சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kurumurthy ,ministers ,Tamil Nadu ,Secretary of State ,
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...