திருவட்டாரில் பரபரப்பு ஆற்றில் மூழ்கி போட்டோ கிராபர் பலி

குலசேகரம், ஜன. 19: திருமண நிகழ்ச்சியை படம் பிடித்து விட்டு திருவட்டார் பகுதியில் உள்ள பரளியாற்றில் குளித்த போட்டா கிராபர் நீரில் மூழ்கி பலியானார். அருமனை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்(39). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். போட்டோ கிராபரான இவர் அருமனை பகுதியில் சொந்தமாக ஸ்டுடியோ வைத்துள்ளார். நேற்று திருவட்டார் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் போட்டோ எடுப்பதற்காக குலசேகரம் மணலிவிளை பகுதியை சேர்ந்த மற்றொரு போட்ேடடா கிராபர் விஜயபிரதாப்புடன் திருமணமண்டபத்திற்கு சென்றார். அங்கு நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் இருவரும் திருவட்டார் பகுதியில் உள்ள பரளியாற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

கேமராக்களை கரையில் வைத்து விட்டு இருவரும் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். இவர்கள் குளித்த பகுதி மணல் திருட்டு காரணமாக பள்ளமான பகுதியாக உள்ளது. மேலும் மணல் திருட்டால் அந்த பகுதியில் உள்ள உறை கிணறுகளும் சரிந்த நிலையில் உள்ளது.

இது தெரியாமல் இருவரும் அங்கு குளித்த போது ஸ்டீபன் தண்ணீரில் ஆழமான பகுதியில் மூழ்கி உள்ளார். நீண்ட நேரமாகியும் ஸ்டீபனை காணாததால் விஜயபிரதாப் கரையில் ஏறி அந்த பகுதியில் நின்றவர்களிடம் கூறி உள்ளார்.

 இதனையடுத்து அப்பகுதியினர் குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து அந்த பகுதி முழுவதும் தண்ணீரில் தேடினர். சுமார் ஒருமணி நேர தேடுதலுக்கு பின்னனர் ஸ்டீபன் சடலமாக மீட்கப்பட்டார். இது பற்றி திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories:

>