×

மருத்துவர்கள், பெற்றோர் ஆலோசனை பெற்று ஆரம்ப பள்ளிகளையும் தமிழக அரசு திறக்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

நாகர்கோவில், ஜன.20: நாகர்கோவில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், அதன் மாநில பொது செயலாளரும், ஜாக்ேடா ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான  இரா.தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: 15 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 4068 பேர் மீது தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. இதனை ரத்து  செய்ய வலியுறுத்தி, அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இதனால், 3 கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்தோம். இதன்படி முதல் கட்டமாக, கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி அவர்கள் மூலமாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கினோம்.

அம்மனுவில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதனைவலியுறுத்தி இரண்டாம் கட்டமாக வருகிற பிப்ரவரி 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதற்கும் செவி சாய்க்கா விட்டால், மாநில அளவில் சென்னையில் போராட்டம் நடத்தப்படும். தமிழக அரசு 10 மற்றும் 12ம் வகுப்புகளை தொடங்க உள்ளது வரவேற்கத்தக்கது. இதுபோன்று ஆரம்ப பள்ளிகளிலும், தற்போது ஆசிரியர்கள் பணிக்கு வந்து கொண்டு தான் உள்ளனர்.

எனவே ஆரம்ப பள்ளிகளிலும், குறிப்பாக பாதிப்பு அதிகம் ஏற்படாத கிராமப்புற பள்ளிகளை மருத்துவர்கள், பெற்றோர்கள் ஆலோசனைகள் பெற்ற தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வகுப்புகளை தொடங்க அனுமதிக்க வேண்டுகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாவட்ட செயலாளர் தியாகராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன், பொருளாளர் ராபர்ட் பாபு மற்றும் நிர்வாகிகள் நித்யலெட்சுமணவேல்,  லிங்கேஸ்வர், முருகராஜ்,  பாக்கியமணி, மாசில் ஜெபசெல்வராஜ், சாமுவேல், ஜேசுராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Teachers' Coalition ,schools ,government ,doctors ,Tamil Nadu ,parents ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...