×

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டில் 10,719 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்பு

கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாவட்ட அதிகாரி ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் 28ம், தர்மபுரி மாவட்டத்தில் 25ம் இயங்கி வருகின்றன. விபத்தில் சிக்குபவர்களை மீட்டு அரசு மருத்துவமனைகளில் சேர்ப்பது, கர்ப்பிணிகளை பிரசவத்திற்காக அழைத்து செல்வது போன்ற பணிகளை 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். மேலும், கொரோனா பாதித்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் பணிகளையும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதித்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 2,979 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5,482 பேரும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.  

தர்மபுரி மாவட்டத்தில் 9,330 கர்ப்பிணி பெண்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13,959 பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய 4,408 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 6,311 பேரும் அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ஆம்புலன்சில் அழைத்து வரும் போது 35 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்துள்ளது. அதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 140 பேர் என 175 பேருக்கு ஆம்புலன்சில் பிரசவம் நடந்துள்ளது. மேலும் பிரசவத்திற்காக அழைப்பு வந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலமாக தர்மபுரி மாவட்டத்தில் 91 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 203 பேருக்கும் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 36,689 அழைப்புகளும், தர்மபுரி மாவட்டத்தில் 28,718 அழைப்புகளும் பெறப்பட்டு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடங்களுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Dharmapuri ,Krishnagiri district ,ambulances ,
× RELATED டேங்க் ஆபரேட்டரை கொலை செய்த தொழிலாளி கைது