தர்மபுரி நகராட்சி 10வது வார்டில் தார்சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

தர்மபுரி, ஜன.20: தர்மபுரி நகராட்சி 10வது வார்டில் ஏஎஸ்டிசி நகர், ஆவின்நகர், நந்திநகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அரசு பணியாளர்கள், வணிகர்கள், விவசாயிகள் உள்ளனர். இக்கிராமத்திற்கு பென்னாகரம் சாலை மேம்பாலத்தில் இருந்து பிரிந்து பிரதான சாலை ஏஎஸ்டிசி நகர் மற்றும் ஆவின்நகருக்கு வருகிறது. இந்த பிரதான சாலையை பிடமனேரி, எம்ஜிஆர்நகர், அப்பாவுநகர், குமாரசாமிபேட்டை உள்ளிட்ட பகுதி மக்கள் தினசரி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன் இந்த பிரதான தார் சாலை குண்டும், குழியுமாக மாறியது. தற்போது மண்சாலையாக மாறியுள்ளது. இச்சாலையை புதுப்பித்து, புதிய தார்சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள், நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை சாலை அமைக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஆவின்நகர், நந்திநகர், ஏஎஸ்டிசி நகர் பகுதி மக்கள் புதிய தார்சாலை அமைக்கக்கோரி, ஏஎஸ்டிசி நகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்முக்கிய பிரமுகர்கள் சமாதானம் செய்ததால், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து ஏஎஸ்டிசி நகர், ஆவின்நகர் பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த ஒருவருடத்திற்கு முன் ஏஎஸ்டிசி நகர் பிரதான சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால் இதுவரை தார்சாலை அமைக்க ஒப்பந்ததாரர் முன்வரவில்லை.மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் நந்திநகர் பகுதியில், சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.அதுவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.  கடந்த 6 மாதமாக புதிய தார்சாலை அமைக்கக்கோரி, அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வருகிறோம். அவர்களும் கண்டுகொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் மறியலில் ஈடுபட்டோம். ஏஎஸ்டிசி நகர் பிரதான சாலையை புதுப்பித்து புதிய தார்சாலை அமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை என்றால், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் மக்கள் முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு கூறினர்.

Related Stories:

>