நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

நெல்லை, ஜன. 20: பிரசித்திப் பெற்ற டவுன் நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22ம் தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடக்கிறது. ‘திருநெல்வேலி’ எனப் பெயர் வரக்காரணமான நெல்லையப்பர் கோயில், தமிழக அளவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. ஆண்டுதோறும் இக்கோயிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு தைப்பூசத் திருவிழா கொடியேற்றம், நேற்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று நெல்லையப்பரை வழிபட்டனர். தைப்பூச திருவிழா 11 நாட்கள் நடக்கிறது. விழாவில் வருகிற 22ம் தேதி நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் நடக்கிறது.

அன்று இரவு 8 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடக்கிறது. வரும் 28ம் தேதி நெல்லை சந்திப்பு கைலாசபுரம் சிந்துபூந்துறை தீர்த்தவாரி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் தைப்பூசத் தீர்த்தவாரி நடக்கிறது. இதையொட்டி அன்று மதியம் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகளுடன் புறப்பட்டு சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் வந்தடையும் வைபவம் நடக்கிறது. அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி, சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. வரும் 29ம் தேதி சவுந்திரசபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு சுவாமி திருநடனம் காட்டியருளல், சவுந்திர சபா நடராஜர் திருநடனக்காட்சி நடக்கிறது. 30ம் தேதி சந்திர புஷ்கரணி என்ற வெளி தெப்பக்குளத்தில் பஞ்சமூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Related Stories:

>