×

நெல்லை நான்கு வழிச்சாலையில் வாலிபரிடம் வழிப்பறி பெங்களூரை சேர்ந்த 4 பேர் கைது சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்

நெல்லை, ஜன. 20: நெல்லை ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் நேற்றிரவு பைக்கில் சென்ற வாலிபரிடம் முகவரி கேட்பது போன்று நடித்து அவரை தாக்கி 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை பறித்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்து சினிமா பாணியில் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள கே புதூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி செந்தில்குமார் (31). இவர் நேற்றிரவு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையிலிருந்து பைக்கில் பாளை ரெட்டியார்பட்டியிலுள்ள நண்பரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். நெல்லை ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது அங்கு கர்நாடக மாநிலம் நம்பர் பிளேட்டுடன் சொகுசு காரிலிருந்த 4 வாலிபர்கள், செந்தில்குமாரை வழிமறித்து முகவரி கேட்பது போன்று நடித்து அவரை தாக்கி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதனையடுத்து உஷாரான செந்தில்குமார் நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அவசர பிரிவு செல்போனில் தொடர்பு ெகாண்டு நடந்த விவரங்கள் மற்றும் காரின் கலர், நம்பரை தெரிவித்தார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதம்அலி, எஸ்ஐ மரியம் பிரான்சிஸ் சேவியர் மற்றும் போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை தேடினர். இதனிடையே பாளை கேடிசிநகர் நான்குவழிச்சாலை பாலம் அருகேயுள்ள பிரபல ஓட்டல் முன்பு காரை நிறுத்தி விட்டு வழிப்பறி கொள்ளையர்கள் புரோட்டாவும், சிக்கனும் ஆர்டர் செய்து கொண்டிருந்தனர்.

இதனையறிந்த போலீசார் சினிமா பாணியில் ஓட்டலில் வழிப்பறி கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடித்து பாளை குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகேயுள்ள மாண்டியா பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (27), ரகுவரன் (31), குமார் மகன் அபிஷேக் (26), பிரவீன்குமார் (26) ஆகிய 4 பேர் எனவும், இவர்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பே கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூர் வழியாக காரில் புறப்பட்டு கோவை, திண்டுக்கல், மதுரை வழியாக நெல்லை வரையில் பல பகுதிகளில் வழிப்பறிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடைசியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வழிப்பறி செய்து விட்டு திருவனந்தபுரம், பாலக்காடு வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லதிட்டமிட்டுள்ளனர். மேலும் ஒரு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு விட்டால் அங்குள்ள ஏதேனும் ஓட்டலில் காரை மறைவாக நிறுத்தி விட்டு போலீஸ் தேடுதல் வேட்டைக்கு பின்னர் அடுத்து மாவட்டத்திற்கு சென்று கைவரிசை காட்டி வந்துள்ள விவரம் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து, செந்தில்குமாரிடமிருந்து பறித்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பதிவெண் கொண்ட சொகுசு கார் ஆகியவற்றை மீட்டனர். மேலும் அவர்கள் வரும் வழியில் வழிப்பறியில் ஈடுபட்ட நகைகளை எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்து போலீசார் நேற்றிரவு விடிய, விடிய விசாரணை நடத்தினர். இவர்கள் மீது வேறு எந்த மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Bangalore ,road mishap ,
× RELATED பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!