×

நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி கலெக்டரிடம் திமுக மனு

நெல்லை, ஜன. 20: நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள், வாழைகள் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலெக்டரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. திமுக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் கட்சியினர் கலெக்டரிடம் அளித்த மனு: நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த கனத்த மழையில் அம்பை சட்டசபை தொகுதியில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்தும், வாழைகள் சேதம் அடைந்தும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டோர் குடியிருக்க வீடுகளின்றி தவித்து வருகின்றனர்.

கடந்த 2 தினங்களாக நானும், நெல்லை எம்.பி. ஞானதிரவியம் மற்றும் திமுக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வெள்ளச் சேதங்களை கண்டறிந்தோம். இன்னும் பல இடங்களில் வேளாண்மை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சேதங்களை கணக்கிடவில்லை எனத் தெரிகிறது. எனவே அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், வாழைக்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் என பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், வீடிழந்தோருக்கும் உரிய நிவாரணம் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு அளிக்கும் நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், தொண்டரணி மாநில துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் அம்பை பரணிசேகர், சேரன்மகாதேவி மேற்கு ராஜகோபால், கிழக்கு பிரபு, கணேஷ்குமார் ஆதித்தன், இளைஞரணி அமைப்பாளர் செல்லத்துரை, விவசாய தொழிலாளர் அணி மாஞ்சோலை மைக்கேல், சேரை நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், மணிமுத்தாறு பேரூர் செயலாளர் முத்துகணேஷ், விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி, துணை அமைப்பாளர் பால்மாரி, வக்கீல் அணி துணை அமைப்பாளர் செல்வசூடாமணி, இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், ஐ.டி. பிரிவு அண்ணாத்துரை, விவசாய தொழிலாளர் அணி ஐயப்பன், இளைஞர் அணி கண்ணன், பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Collector ,district ,Nellai ,floods ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...