கலெக்டர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மாவட்டத்தில் 16,640 பேருக்கு தடுப்பூசி

திருப்பூர், ஜன. 19: திருப்பூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 16,640 சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான விபரங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். திருப்பூர் அவிநாசி ரோடு குமார் நகர் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் நேற்று மாலை கொரோனா வைரஸ் தடுப்பூசியினை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் செலுத்தி கொண்டார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த 16ம் தேதி துவக்கப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக சுமார் 13,500 டோஸ் மருந்துகள் பெறப்பட்டு திருப்பூர் துணை இயக்குநர், சுகாதார பணிகள் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட குளிர்சாதன பெட்டியில் காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை, தாராபுரம் அரசு மருத்துவமனை, அவினாசி அரசு மருத்துவமனை மற்றும் பெருமாநல்லூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் இத்தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்படுகிறது.

இந்த மருத்துவ நிலையங்களில் தினமும் 100 பேர் வீதமாக 400 பேருக்கு தடுப்பூசி மருந்து செலுத்தப்படுகிறது. இதுவரை 285 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவை இருப்பின் பிற இடங்களிலும் இத்தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசி பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக சுமார் 16,640 சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான விபரங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசின் உரிய வழிகாட்டுதலின் படி, இத்தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. களபணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்க வேண்டும் என்பதற்காக நான் தடுப்பூசி செலுத்திகொண்டேன். இதுவரை ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆகையால், வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த கொரோனா தடுப்பூசி பணி முழுமையாக வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின் போது, இணை இயக்குநர் (பொது சுகாதாரம்) பாக்கியலட்சுமி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீசன், மாநகர நல அலுவலர் பிரதீப், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>