×

10 ஆண்டுகளாக மனு அளித்தும் பயனில்லை மின் இணைப்பு கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு

திருப்பூர், ஜன. 19: 10 ஆண்டாக மனு அளித்தும் மின் இணைப்பு கிடைக்கவில்லை என்று கூற பொங்கலூர் பெரியார் நகர் பகுதி மக்கள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள்   மனுக்கள் அளித்தனர். அதன் விபரம்: பொங்கலூர் பெரியார் நகர் பகுதி பொதுமக்கள்  அளித்த மனு: இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு, மின் இணைப்பு மற்றும் பட்டா வழங்க வேண்டும் எனக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் மனு அளித்த பின்னர் அதிகாரிகள் நேரில் வந்து பார்த்துவிட்டு சரி செய்து தருவதாக உறுதியளித்து செல்கின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், எங்கள் குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்கள் மாலை நேரத்திற்கு பின்னர்  வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மின்சாரம் மற்றும் பட்டா வழங்க வேண்டும்.

 திருப்பூர், கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனு: இப்பகுதியில் உள்ள ஆவரங்குட்டை நீர் நிலை விளைநிலங்களுக்கு ஆதாரமாகவும், அருகில் உள்ள குக்கிராமங்களுக்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கவும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.இந்நிலையில், குட்டை அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே,  நீர்நிலையை ஆக்கிரமித்து கழிப்பிடம் கட்ட பூமிபூஜை போடப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கன்வாடி மையம் அருகே அபாய நிலையில் இருக்கும் கழிப்பிடத்தை அகற்ற தொடர்ந்து வலியுறுத்துகிறோம். எனவே அபாய நிலையில் இருக்கும் கழிப்பிடத்தை இடித்துவிட்டு, நீர்நிலை இல்லாத பகுதிக்கு மாற்றுவதுடன், நீர் நிலை பகுதியில் கழிவறை கட்டும் திட்டத்தையும் கைவிட வேண்டும்.

திருப்பூர், மடத்துக்குளம் வட்டம் தாசர்பட்டி, உலகப்பகவுண்டன்புதூர் பொதுமக்கள் அளித்த மனு: இப்பகுதியில் 30 குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். போதிய இடவசதியின்றி கடந்த 15 ஆண்டுகளாக ஒரே வீட்டில் 3 அல்லது 4 குடும்பங்கள் சேர்ந்து வாழ்கிறோம். தற்போது குடியிருக்க மிகுந்த சிரமமான சூழலை சந்தித்துள்ளோம். ஆகவே எங்களுக்கு குடியிருக்க தனித்தனி  வீடு வசதி ஏற்பாடு செய்துதர வேண்டும். இதேபோல், வெள்ளியங்காடு முதல் வீதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசிக்கிறோம். நாங்கள் அனைவரும் சலவைத்தொழிலாளர்கள். எங்களுக்கு பல ஆண்டுகளாக இடம், வீடு எதுவும் இல்லாமல் சிரமத்தில் இருந்து வருகிறோம். ஆகையால், எங்களுக்கு வீடு கட்ட இடம் அல்லது வீடு வழங்க வேண்டும்.

Tags : Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...