மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும்

மஞ்சூர்,ஜன.19: நீலகிரியில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் அயராது உழைத்து தேர்தலில் திமுக வெற்றி பெற செய்வது என திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊட்டி தெற்கு ஒன்றிய திமுக மற்றும் கீழ்குந்தா பேரூர் கழகத்தின் சார்பில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மஞ்சூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் உமாராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ராஜூ, முன்னாள் பேரூராட்சி தலைவர் சின்னான், பேரூராட்சி அவைதலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கீழ்குந்தா பேரூர் கழக செயலாளர் மஞ்சூர் பாபு வரவேற்றார். மாவட்ட செயலாளர் முபாரக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது மற்றும் அதிமுக ஆட்சியின் அவலங்கள், பொதுபிரச்சனைகள் குறித்து தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கூடலூ, ஊட்டி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக தலைமையிலான வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது. திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் எடுத்து கூறி வாக்குகள் சேகரிப்பது. இதன் மூலம் 3 தொகுதிகளிலும் அயராது உழைத்து திமுகவை வெற்றி பெற செய்வது என தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக மஞ்சூர் பஜாரில் உள்ள கலைஞர் திடலில் திமுக கொடியேற்றிவைத்த மாவட்ட செயலாளர் முபாரக் தொடர்ந்து திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதில் ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், தொன்டர்கள், மகளிரணியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Related Stories:

>