×

காயமடைந்த யானைக்கு முதுமலை முகாமில் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் தீவிர ஆலோசனை

கூடலூர்,ஜன.19: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல பகுதியாக உள்ள சிங்கார வனச்சரகத்தில் சுமார் 40 வயதான ஆண் யானை ஒன்று காயத்துடன் சுற்றி திரிகின்றது. இதன் காயம் ஆறுவதற்காக பழங்களில் மருந்து மாத்திரைகள் வைத்து வனத்துறையினர் வழங்கியதோடு அந்த யானையை கண்காணித்தும் வந்தனர்.  தொடர்ந்து கடந்த 28ம் தேதி கால்நடை மருத்துவ குழுவினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அதன் உடலில் ஏற்பட்டிருந்த காயத்தை சுத்தப்படுத்தி மருந்து செலுத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து பழங்களில் மருந்து மாத்திரைகள் வைத்தும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் யானை அடிக்கடி குடியிருப்பு பகுதிகள் சாலைக்கு வந்து விடுவதால் யானையால் பொதுமக்களுக்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க வனக்குகுழுவினர் இந்த யானையை அவ்வப்போது வனப்பகுதிக்குள் விரட்டி  வருகின்றனர்.

நேற்று முன்தினம் காலை சிங்காரா சாலையில்  யானை நின்றதால் சுமார் 4 மணி நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாலையில் யானையின் காதிலிருந்து ரத்தம் வடிவதை வனத்துறையினர் பார்த்து அதற்கு சிகிச்சை அளித்து உள்ளனர். யானையின் காது பகுதி பல இடங்களில் கிழிந்து தொங்குவதோடு அதிலிருந்து இரத்தம் வடிந்து வருகின்றது. காதுப் பகுதி அழுகி கொட்டியும் வருவதோடு ரத்தம் தொடர்ந்து வடிகின்றது. இந்த யானை தற்போது நிற்கும் மசினகுடி ரிவர்வேலி வனப்பகுதியில் யானைய கண்காணித்து வரும் வனத்துறையினர் பழங்களில் மாத்திரைகள் வைத்து வழங்கினர்.

யானையின் காது பகுதியில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் வலி காரணமாக துதிக்கையால் அடிக்கடி காது பகுதியில் தட்டுவதால் காயத்தின் தன்மை அதிகரித்து காது பிய்ந்து இருக்கலாம் என்றும்  ரத்தம் வடிவதை நிறுத்த பழங்களில் மாத்திரைகள் வைத்து வழங்கப்படுவதாகவும் வனத்துைறயினர் தெரிவித்தனர். இந்த யானையை தெப்பக்காடு முகாமிற்கு பிடித்து சென்று சிகிச்சை அளிக்கவேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறைஅதிகாரிகள் முதுமலைக்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags : forest department ,camp ,Mudumalai ,
× RELATED வாக்காள பெருமக்களே என்ற வார்த்தை...