×

கட்டுப்பாடுகள் தளர்வு ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கோவை, ஜன. 19: கொரோனா தடுப்பூசி போட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 477 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.  கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் கோவை அரசு மருத்துவமனை உள்பட 4 மையங்களில் மூன்றாவது நாளாக நேற்று நடந்தது. ஒரு மையத்திற்கு 100 பேர் வீதம் தினமும் 400 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், தடுப்பூசி குறித்த அச்சம் காரணமாக தடுப்பூசி போட பதிவு செய்த பலர் தடுப்பூசி போட முன்வரவில்லை. இதனால், முதல் நாளில் 72 பேரும், இரண்டாவது நாளில் 245 பேர் என மொத்தம் 317 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் தற்போது வரை ஏற்படவில்லை. இதையடுத்து, நேற்று தடுப்பூசி போட பலர் ஆர்வம்காட்டினர். மேலும், ஒரு மையத்திற்கு 100 பேர் மட்டுமே தடுப்பூசி போட வேண்டும் என்ற கட்டுப்பாடு தற்போது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 477 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் 253 பேருக்கும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 117 பேருக்கும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 53 பேருக்கும், நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 54 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், தினமும் கூடுதல் பயனாளிகளுக்கு தடுப்பூசி போடவும், ராமநாதபுரம், காரமடை, சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், “மாவட்டத்தில் மூன்று நாட்களில் 794 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி தினமும் 100 பேருக்கு போடப்படும் என்ற எண்ணிக்கைக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு, போட்டோ உள்ளிட்டவை பயன்படுத்தி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், தினமும் கூடுதல் பேருக்கு தடுப்பூசி போடப்படும்” என்றார்.

Tags : Corona ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...