ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் மீண்டும் செயல்பட துவங்கியது

கோவை, ஜன. 19:  கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது. அதில் 140க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு சத்தியமங்கலம், சிறுமுகை, பெங்களூரு, நீலகிரி, திண்டுக்கல், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து தினமும் 20 டன்களுக்கும் அதிகமான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25 முதல் பூமார்க்கெட் வளாகம் மூடப்பட்டது. இதனையடுத்து அங்கு செயல்பட்டு வந்த கடைகள், புரூக்பாண்ட் சாலையில் உள்ள தேவாங்கர் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டன. தற்காலிகமாக அங்கு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதனிடையே, கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மலர் அங்காடி வளாகத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் 95 பூக்கடைகள் புதியதாக கட்டும் பணியானது, கடந்த ஆண்டு மே மாதம் துவங்கியது. இந்த பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இங்கு அமைக்கப்பட்ட புதிய கடைகள் ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது. ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் துவங்கப்படவில்லை.  தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதன் காரணமாக புரூக்பாண்ட் சாலையில் உள்ள  தேவாங்கர் பள்ளி  மைதானத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக பூ மார்க்கெட் மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories:

>