சென்னை: மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற 31 விவசாயிகள் மற்றும் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்று விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விருதுகள் வழங்கினார்.
தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவை அடைவதை உறுதி செய்திடவும். தமிழக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடனும் தமிழக விவசாயிகளுக்கான தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு இடையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர் மற்றும் சீரிய முயற்சிகளின் காரணமாக இரு போக சாகுபடி பரப்பு மற்றும் பாசன வசதி பெறும் பரப்பானது கணிசமாக உயர்ந்து வருவதுடன் புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக மகசூலும் அதிகரித்து வருகிறது. உற்பத்தியை பெருக்குவதற்கான திட்டங்கள் மட்டுமல்லாது விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பயிர் விளைச்சல் போட்டிகள் வாயிலாக அதிக விளைச்சலுக்கான விருதுகள், நம்மாழ்வார் விருதுகள், திருந்திய நெல் சாகுபடிக்கான சி.நாராயணசாமி நாயுடு விருது போன்ற பல்வேறு விருதுகளை தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு வழங்கி கவுரவித்து வருகிறது.
2024-25ம் ஆண்டில் கேழ்வரகு பயிரில் முதல் பரிசு பெற்ற தங்கமணி, தெத்திகிரிப்பட்டி, சேலம் மாவட்டத்தில் நிலக்கடலை பயிரில் முதல் பரிசு பெற்ற சுதாகர், நத்தாநல்லூர் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகியோருக்கு நந்தம்பாக்கத்தில் நடந்த வேளாண் வணிக திருவிழாவில் முதல்வரால் விருது வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 2024-25ம் ஆண்டுக்கான மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், கரும்பு ஆகிய பயிர்களில் அதிக விளைச்சல் பெற்ற 31 விவசாயிகள் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களில் அதிக விளைச்சல் பெற்ற 3 விவசாயிகளுக்கு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சரால் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பயிரிலும் அதிக விளைச்சல் பெற்ற முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் என மொத்தம் 34 விவசாயிகளுக்கு ரூ.55 லட்சம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வேளா ண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் ஆபிரகாம், வேளாண்மைத்துறை இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
