10ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் குறைப்பில் குளறுபடி

ஈரோடு, ஜன. 19:  10ம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், சமூக அறிவியல் பாடத்தில் குறைந்த அளவு பாடங்களே குறைக்கப்பட்டு குளறுபடி நடந்துள்ளதால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நாளை 19ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெற உள்ளது. இதனிடையே பொதுத்தேர்வுக்கு மிக குறைந்த நாட்களே உள்ளதால் 10 வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களிலும் 40 சதவீதம் அளவுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், குறைக்கப்பட்ட பாடங்கள் அடிப்படையில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

 தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், சமூக அறிவியலில் மட்டும் மொத்தமுள்ள 27 பாடங்களில் 12 பாடங்கள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 15 பாடங்களும் முழுமையாக படிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் மற்ற பாடங்களில் தலா 40 சதவீத பகுதிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், சமூக அறிவியலில் மட்டும் அதிக பாடம் படிக்க வேண்டும் என்று கூறியிருப்பது ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சமூக அறிவியல் பாடத்திற்கான பாட வேளைகள் குறைவாக வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாடக்குறைப்பில் குளறுபடிகள் நடந்துள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாக சமூக வளைதலங்களில் ஏராளமான மீம்ஸ்கள் பறக்கின்றன. மற்ற அனைத்து பாடங்களுக்கும் ஒரு நியாயம், சமூக அறிவியலுக்கு மட்டும் ஒரு நியாயமா என்றும், சமூக அறிவியலை மட்டும் கொரோனா விட்டுவைத்தது எப்படி?. என்று மீம்ஸ்கள் பறக்கின்றன.

 இது சமூக அறிவியல் ஆசிரியர்கள், மாணவர்களிடையே விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>