×

சிவகாசி நகரில் கிடப்பில் போடப்பட்ட சுற்றுவட்ட சாலை திட்டம்

சிவகாசி, ஜன.19:  சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சுற்றுவட்ட சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இப்பணிக்காக  வருவாய் துறையினர் நிலத்தை அளவீடு செய்து கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் பின்  பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சிவகாசி நகரில் வீடுகள், வணிக நிறுவனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப நகராட்சியில்  சாலைகள், போக்குவரத்து வசதிகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.150 கோடி மதிப்பில் சிவகாசி நகரை சுற்றிலும் சுற்றுவட்ட சாலை அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக  நிலஅளவை பணிகள் மேற்கொள்ள முதல் கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது தனியார் மூலம் சாலை அமையவுள்ள இடங்களை சர்வே செய்து குறியீடுகள் செய்யப்பட்டன.

இத்திட்டத்தில் விருதுநகர் சாலையில் உள்ள வடமலாபுரத்தில் இருந்து கீழ திருத்தங்கல், நாரணாபுரம், சுந்தர்ராஜபுரம், தெற்கு ஆனைக்குட்டம், கொங்கலாபுரம், பூலாவூரணி, நடுவபட்டி, பூவநாதபுரம், செங்கமலநாச்சியார்புரம் வழியாக சுமார் 40 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக வருவாய் துறை ஆய்வாளர்கள், சர்வேயர்கள் மூலம் சாலை அமையவுள்ள நிலத்தை கையகப்படுத்தி அதன்  உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.  கீழ திருத்தங்கல், நாரணாபுரம் கிராம பகுதியில் உள்ள நிலங்கள் வருவாய் துறையினர் மூலம் அளவீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த சுற்றுவட்ட சாலை அமையவுள்ள 10 கிராமங்களிலும் நிலங்கள் கையப்படுத்தி நில உரிமையாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக 6 வருவாய் ஆய்வாளர்கள், 4 சர்வேயர்கள், மற்றும் 10க்கும் மேற்பட்ட வருவாய்துறை பணியாளாகள் இந்த பணியில்  ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். நிலம் கையப்படுத்தும் பணிகள் முடிந்ததும் சாலை அமைக்கும் பணிகளை  துவங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது  சுற்றுவட்ட சாலை அமைக்கும்  பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  கடந்த சில மாதங்களாக எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தாமல் அரசு கிடப்பில் போட்டு விடுமோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, சுற்றுவட்ட சாலை அமைக்கம் பணியை விரைந்து செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு