மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் தலைமையாசிரியர் சங்கம் வலியுறுத்தல்

காரைக்குடி, ஜன.19: புதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத் தலைவர் பீட்டர்ராஜா தெரிவிக்கையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது வரவேற்க கூடியது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் இக்கல்வி ஆண்டில் புதிதாக 5.18 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசுப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து அரசுப் பள்ளிகளிலேயே படிக்கும் வகையிலும், வரும் ஆண்டுகளில் புதிய மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, ஆசிரியர் பணி நியமனங்கள் செய்ய வேண்டும். அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். 9 மாத இடைவெளிக்கு பின்னர் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் முறையாக வழங்கப்பட்டதா என ஆய்வு செய்ய காலியாக உள்ள 20க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் தலைமை ஆசிரியர்கள் கூட்டங்களை இணையதளம் வாயிலாக நடத்த வேண்டும் என்றார்.

Related Stories:

>