×

புதர்மண்டி கிடக்கும் கழிவறை, சுத்தம் செய்யாத வகுப்பறை அவசரகதியில் திறக்கப்படும் பள்ளிகள் பெற்றோர்கள் கடும் அதிருப்தி

சாயல்குடி, ஜன.19: தொடர்ச்சியாக 10 மாதங்கள் செயல்படாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிவறைகள் புதர்மண்டி கிடக்கின்றன. வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் அலங்கோலமாக கிடக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1064 அரசு பள்ளிகள், 249 அரசு உதவிபெறும் பள்ளிகள், 211 தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,524 பள்ளிகள் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17 முதல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி பள்ளிகளில் மாணவர் சேர்ந்து வந்தனர். ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு படித்து வந்தனர்.
இந்நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி இன்று சுமார் 270 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிவறைகள் இருந்தும், கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டதால் கதவுகள், கோப்பைகள் மற்றும் செப்டிக் டேங்க் உள்ளிட்டவை சேதமடைந்து கிடக்கிறது. கிராமப்புற பள்ளிகளில் கழிவறைகள் பல மாதங்களாக பயன்படுத்தப்படாததால் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மாணவர்கள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது.  இதனால் மாணவிகள் பெரும் அவதிப்படும் நிலை உள்ளது. தரமற்று கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங் களில் மேற்கூ ரை, பக்கவாட்டு மற்றும் தரைதளம் சேதமடைந்து கிடக்கிறது.

10 மாதங்கள் பூட்டியே கிடந்ததால் வகுப்பறை தூசு போன்றவற்றால் அலங்கோலமாக கிடக்கிறது. பெரும்பாலான அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் இல்லை. இதனால் மாணவர்களே வந்து தூய்மை செய்யும் அவலம் உள்ளது. இதனால் மாணவர்கள் படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியாமல், பயத்துடன் வகுப்புகளை கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, திருப்புல்லாணி, நயினார்கோயில், போகலூர் போன்ற ஊரக பகுதிகளில் முறையாக குடிநீர் போன்ற வசதிகள் கிடையாது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கடும் சிரமத்துடன் படிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பள்ளிகளை திறந்த கையோடு அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : schools ,Parents ,opening ,Putharmandi ,emergency ,classrooms ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...