பள்ளியில் தேங்கி கிடக்கும் மழைநீர் பிடிஓ.வை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் பரமக்குடி அருகே பரபரப்பு

பரமக்குடி, ஜன.19: பரமக்குடி அருகே பொட்டகவயல் மேல்நிலை பள்ளியில் பல நாட்களாக தேங்கியுள்ள மழை நீரை அகற்றாததை கண்டித்து பெற்றோர்கள் பிடிஓ.வை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். பரமக்குடி அருகே பொட்டகவயல் அரசு மேல்நிலைபள்ளியில் 650 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக ஒன்பது மாதங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மீண்டும் இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில் பரமக்குடி அருகே பொட்டகவயல் மேல்நிலை பள்ளியில் தொடர் மழையால் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. மழைநீரை அகற்றக் கோரி பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மழைநீரை அகற்றக்கோரி பெற்றோர்கள் நயினார்கோவில் பிடிஓ சேவுக பெருமாளை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மழைநீரை அகற்றாவிட்டால் அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மழைநீர் அகற்ற விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர். பெற்றோர்கள் கூறுகையில், பள்ளி வளாகத்தில் பல நாட்களாக மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பள்ளிக்குள் தண்ணீரில் இறங்கிதான் நடந்து செல்ல வேண்டும். மேலும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இவை வகுப்பில் உள்ள மாணவர்களை கடித்து டெங்கு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும். மழைநீரை அகற்றாவிட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்றனர்.

Related Stories:

>