பயோமெட்ரிக்கில் தொடர் பிரச்னை ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

மதுரை, ஜன.19:  ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் கார்டுதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இத்திட்டம் கடந்தாண்டு அக்டோபர் முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கான சர்வர் சரிவர வேலை செய்யவில்லை. இதனால், பிஓஎஸ் இயந்திரத்தில் உள்ள பயோமெட்ரிக் சரிவர வேலை செய்யவில்லை. பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பொங்கல் தொகுப்பு ஆகியவை பழைய முறைப்படி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  இந்நிலையில், நேற்று முதல் மீண்டும் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றனர். அப்போது அவர்களின் கைவிரல் ரேகையை பிஓஎஸ் இயந்திரத்தில் பதிவு செய்தபோது, ஆதார் பதிவுவிபரம் வரவில்லை.

இதனால், ஒவ்வொருவரும் பல மணி நேரம் காத்திருந்தனர். மீண்டும் சர்வர் பிரச்னையால், பயோமெட்ரிக் செயல்பட வில்லை.  பொதுமக்கள் பழைய முறைப்படி பொருட்கள் வழங்க வேண்டும் என கோரி, கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பல இடங்களில் பொதுமக்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையை கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இப்பிரச்னையால், பயோமெட்ரிக் மூலம் ஒரு கடையில் 10 கார்டுகளுக்குகூட பொருட்கள் வழங்க முடியவில்லை.

மதுரை மாவட்டத்தில்  மொத்தம் 9.40 லட்சம் ரேஷன்கார்டுகள் உள்ளன. 1,389 ரேஷன் கடைகளுக்கு பயோமெட்ரிக் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சர்வர் பிரச்னையால், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க முடியவில்லை.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்கத்தின் தென்மண்டல செயலாளர் ஆசிரியதேவன் கூறுகையில், ‘ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் மெஷினுக்கு சரியாக இணையதள இணைப்பு கிடைக்கவில்லை. இதனால், இயந்திரம் விரைந்து செயல்படாததாலும், ரேஷன் கடைகளில் பொருள் விநியோகம் பெருமளவு பாதிப்படைந்துள்ளது. 25 நபர்களுக்கு கூட பொருட்கள் விநியோகிக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் விற்பனையாளருடன் வாக்குவாதம் செய்தனர்.   அரசு பயோமெட்ரிக் மெஷின் விரைந்து செயல்படவும், விநியோகம் தடையின்றி நடைபெறவும் விரைவான இணையதள சேவை உள்ள சிம்கார்டு பொருத்தவேண்டும்.  மேலும் கடை வேலை நேரங்களில் பிஓஎஸ் இயந்திரத்திற்கு சர்வர் இணைப்பு தடையில்லாமல் இருக்க வேண்டும். இது ரேஷன் கடைகளின் விற்பனையாளர்களின் கோரிக்கையாகும்’ என்றார்.

பழைய முறைப்படி வழங்க முடியாது

மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி கூறுகையில், ‘மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பயோமெட்ரிக் இயந்திரம் இணையதள இணைப்பு சரியாக கிடைக்க வில்லை. பொங்கலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட இச்சேவை தற்போது ஒரே நேரத்தில் அனைத்து கடைகளிலும் இம்முறை செயலுக்கு வந்ததால், இணைப்பு சரிவர கிடைக்கவில்லை. இதுபற்றி சென்னையில் உணவுப்பொருட்கள் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளோம். சர்வர் பிரச்னையால், இணைப்பு கிடைக்க வில்லை. சரி செய்து வருவதாக கூறியுள்ளனர். பழைய முறைப்படி பொருட்கள் வழங்க முடியாது. அரசு அறிவிப்பு செய்தால்தான் அதன்படி பொருட்கள் வழங்க முடியும். தற்போது பயோமெட்ரிக் முறையில் மட்டுமே பொருட்கள் வழங்க முடியும். நாங்கள் ஏதுவும் செய்ய முடியாது’ என்றார்.

Related Stories:

>