மயானத்திற்கு அடிப்படை வசதி கேட்டு வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

வாடிப்பட்டி, ஜன.19:  மேட்டுநீரேத்தான் கிராம மக்கள் தங்கள் மயானத்திற்கு போதிய அடிப்படை வசதிகள் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாடிப்பட்டி பேரூராட்சி மேட்டுநீரேத்தான் கிராமத்தில் சுமார் 200 தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இக்கிராமத்தில் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் தனியாக மயானம் உள்ளது. இந்த மயானம் போதிய அடிப்படை வசதிகள் இன்றி ஒரே ஒரு தகர கொட்டகை மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த தகர கொட்டகையும் சேதமடைந்தது. இதனால் மயான வசதி இன்றி தவித்து வரும் இக்கிராம மக்கள் பல மாதங்களாக தங்களது மயானத்தில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.

பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று திடீரென வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடம் வந்த போலீசார் பேரூராட்சி அதிகாரியிடம் பேசிக் கொள்ளலாம் என கூறி அலுவலகம் அழைத்துச் சென்றனர். அங்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாடிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின், பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் ஒரு சில தினங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories:

>