ஜல்லிகட்டு,கேலரிக்கு அனுமதி கேட்டு உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை 13 கிராம மக்கள் போராட்டம்

உசிலம்பட்டி, ஜன.19:  உசிலம்பட்டி அருகேயுள்ள தொட்டப்பநாயக்கனூரில் ஜல்லிக்கட்டு பழமை மாறாமல் நடைபெற வேண்டுமென்றும், ஜல்லிக்கட்டு வாடிவாசல் மற்றும் அப்பகுதியில் நிரந்தர கேலரி அமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சியில் கிராம சபைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஊராட்சி நிதியில் வேலை நடைபெறும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து புகார் கொடுத்துள்ளனர். நேற்று தொட்டப்பநாயக்கனூர், செட்டியபட்டி, திடீர் நகர், பூச்சிபட்டி, நக்கலப்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, உசிலம்பட்டி, புத்தூர், கவண்டன்பட்டி, வலையபட்டி, வடுகபட்டி, சீமானூத்து உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உசிலம்பட்டி-தேனி சாலை முருகன் கோவிலிலிருந்து ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலமாக வந்தனர்.

இந்த ஊர்வலம் பேருந்து நிலையம், ஐந்துகல்ராந்தல் தேவர் சிலை, பேரையூர் சாலை வழியாக வந்து உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த ஆர்டிஓ ராஜ்குமார், பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நடத்த கோரியும், நிரந்த ரகேலரி அமைக்க கோரியும், தொட்டப்பநாயக்கனூர் ஜமீன்தாரின் தலைமையில் ஜக்கம்மாள் கோவிலை முன்னிட்டு புத்தூர் வழிவந்த 24 உபகிராமமக்களில் வாழும் பொதுமக்களின் பழமையான ஜல்லிக்கட்டிற்கு அனுமதியும், நிரந்தர கேலரி அமைக்க உத்தரவும் கேட்டனர். அதற்கு ஆர்டிஓ ராஜ்குமார், ஜல்லிக்கட்டு விழாவை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு தடை ஒன்றுமில்லை. நிரந்தர கேலரி அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து இன்னும் 2 தினங்களில் கிராம மக்களுக்கு நலன்பயக்கும் வகையில் தகவல் தருகிறோம் என்றார்.

மேலும் மீண்டும் பொதுமக்கள் கூறும்போது, ஒரு சிலரின் சுயநலத்திற்காக புகார் கொடுத்து ஜல்லிக்கட்டின் பாரம்பரி முறைகளை செய்யவிடாமல் தடுப்பது மிகவும் குற்றமானது. அதுமட்டுமல்லாமல் இப்பகுதியிலுள்ள அனைத்து கிராமமக்களின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும். நிரந்தர கேலரி அமைக்கும் வரைபடத்தையும், இதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் கிடையாது என விளக்கம் கொடுத்து கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும். இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன் பின்பு 13 கிராமமக்களும் கலைந்து சென்றனர்.

Related Stories:

>