×

மழை பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் கோரி நெல்லை, தென்காசி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

நெல்லை, ஜன.19: மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கக் கோரி நெல்லை, தென்காசி கலெக்டர் அலுவலகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு மனுக்கள் அளித்தனர்.   நெல்லை மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் மானூர் ஒன்றியச் செயலாளர் ஆபிரகாம் தலைமையில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பாசிப்பயறு செடிகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் இதுகுறித்த கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளித்தனர். மனுவில் மானூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பெய்த கனமழையால் உளுந்து, பாசிப்பயறு, சிறுகிழங்கு போன்ற பயிர்கள் அறுவடை பட்டத்தில் முளைத்துள்ளன. இதனால் பயிர்களை அறுவடை செய்ய முடியாமலும், வாங்கிய கடனை கட்ட முடியாமலும் தவிக்கிறோம். எனவே ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.    தென்காசி: இதே போல் தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள், முளை கட்டிய உளுந்து,  மக்காச்சோளம் செடிகளுடன் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்  சிவபத்மநாதன் தலைமையில் திரண்டு வந்த விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

 அதில், திருவேங்கடம் பிர்க்கா இளையரசனேந்தல், ஏ கரிசல்குளம்,  குருக்கள்பட்டி, பழங்கோட்டை, வன்னிக்கோனேந்தல், சேர்ந்தமரம் மற்றும் ஊத்துமலை, கருவந்தா, வீரசிகாமணி கிராமங்கள் உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாகுபடி செய்யப்பட்டிருந்த மானாவாரி பயிர்கள் தொடர் மழையால் சேதமடைந்துள்ளன. உளுந்து, பாசிப்பயிறு, மக்காச்சோள பயிர்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக உளுந்து, பாசிப்பயிறு பயிர்கள் பாதிப்புக்கு உள்ளானதோடு குருவிகுளம், திருவேங்கடம் பகுதிகளில் செடியிலிருந்து உளுந்து  பாசிப்பயிறு மக்காச்சோளம் முளை விட்டுள்ளது.  இதே போல் ஊத்துமலை அருகே  சின்னதேவன் குளத்து பாசனத்தை நம்பி 100 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்கதிர்களும் அறுவடையாகும் நேரத்தில் பருவம் தவறிபெய்த மழையால் தூரோடு சாய்ந்து  முளைத்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

  உளுந்து, பாசிப் பயறு மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20  ஆயிரம் வழங்க வேண்டும். ஊத்துமலை பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்கதிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். அப் போது திமுக ஆலங்குளம் வடக்கு ஒன்றியச்  செயலாளர் அன்பழகன், சார்பு அணி அமைப்பாளர் ராஜாமணி, விவசாய அணி துணை  அமைப்பாளர் சாமித்துரை, பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வல்லம்  செல்வம், ராமராஜ், லட்சுமணன், விஜயகுமார், முத்துகுமார், ஞான  செல்வம், ராமச்சந்திரன், விஜயராஜ், செண்பகராஜ், சுரேஷ் கண்ணா, கேசவராம்சிங்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Office ,Tenkasi Collector ,Nellai ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...