திருச்சி மாவட்டத்தில் 506 பள்ளிகள் இன்று முதல் திறப்பு

திருச்சி, ஜன. 19: திருச்சி மாவட்டத்தல் 506 பள்ளிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி நேற்று திருச்சியில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட ஐஏஎஸ் அதிகாரிகள் குழு தலைவர் நிர்மல்ராஜ், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த பத்து மாதங்களாக மூப்பட்டிருந்த பள்ளிகள் இன்று (19ம் தேதி) திறக்கப்படுகிறது. இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் தூய்மை பணிகள் மும்முரமாக நடைபெற்றது. மாநகராட்சி ஊழியர்கள் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். பள்ளிகள் திறப்பை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் பள்ளி கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர் மற்றும் கல்வி அதிகாரிகள் இணைந்த குழுவினர் இரண்டு மாவட்டங்கள் வீதம் நேரில் சென்று பள்ளிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று 506 பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகள் படிக்கும் 75,046 மாணவ, மாணவிகள் வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் திருச்சி, புதுக்கோட்டை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். திருச்சியில் உள்ள தனியார் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு முதலில் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும். முககவசம் கட்டாயம் அணிய வைக்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கை, கால்களை கழுவிய பின்னரே வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க வேண்டும். 3 பள்ளிகளுக்கு ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து கண்காணிக்கப்படும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ் கூறினார். மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>