மணப்பாறை வேளாண் அலுவலகத்தை

மணப்பாறை, ஜன.19: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக சுமார் 2 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பளவில் நெல், உளுந்து, வெங்காயம் மற்றும் பூக்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி அழுகியது. முறையான கணக்கீடு செய்து உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், வருவாய்துறையினர் கணக்கீடு செய்ய களத்திற்கு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி ஆகியோர் தலைமையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அழுகிய நெற்பயிருடன் முற்றுகையிட்டனர். ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரியும், தேசிய உணவு பாதுகாப்பு ஆலோசகருமான சந்தானகிருஷ்ணன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வேளாண் உதவி இயக்குனர் விநாயகமூர்த்தி அருகில் இருந்த நிலையில், ஓய்வுபெற்ற அதிகாரி சமரசம் செய்ததை விவசாயிகள் ஏற்கவில்லை. இதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் லஜபதிராஜ், காவல் ஆய்வாளர் அன்பழகன்ஆகியோர்  சமரசம் செய்தும் அதை ஏற்றுக்கொள்ளாத விவசாயிகள் ரங்கம் உதவி ஆட்சியர் நேரில் வரவேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு முறையான அதிகாரிகள் வராததைக் கண்டித்து, அரை நிர்வாணத்துடன் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால்  மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>