ஐஎஸ்ஐ முத்திரையின்றி வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை

திருவாரூர், ஜன.19: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கூறியிருப்பதாவது, வீட்டு உபயோக மின் சாதனங்களான வாஷிங்மெஷின், மின்சார சமையல் பாத்திரம், நீர் சூடேற்றும் பாத்திரம், தேநீர் தயாரிப்பு பாத்திரம், அரவை இயந்திரம் முடி உலர்த்தும் இயந்திரம் போன்றவைகளை இந்திய அரசு வீட்டு உபயோக மின் சாதனங்கள் தரக்கட்டுப்பாடு ஆணை 1981 ன் படி தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் இந்திய அரசின் தர சான்று பெற வேண்டும். இவ்வாறு தர சான்று இல்லாமல் உற்பத்தி செய்யவோ, இருப்பில் வைத்து விற்பனை செய்யவோ அனுமதி இல்லை. இவ்வாறு தரமற்ற மின்சார வீட்டு உபயோக சாதனங்களை பயன்படுத்தும் போது மின் விபத்து காரணமாக பேரிழப்புகள் ஏற்படுவதால் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத வீட்டு உபயோக பொருட்களை தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மூலம் திடீர் ஆய்வு நடைபெறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அந்த பொருட்களில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லை என்றால் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தற்காலிக மற்றும் நிரந்தர பதிவுகள் மேற்கொள்ள மாவட்ட தொழில் மைய மேலாளரை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் கூறியு்ள்ளார்.

Related Stories: