×

லாரி மோதி ஆழித்தேர் கூண்டு சேதம்

திருவாரூர், ஜன.19: திருவாரூர் ஆழித்தேர் கூண்டில் நேற்றிரவு கனரக லாரி ஒன்று மோதி சேதமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜ சுவாமி கோயில் இருந்து வருகிறது. இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய தேராகும். இந்நிலையில் இந்த ஆழித்தேரானது தேரோட்டத்திற்கு 2 மாதத்திற்கு முன்பாக தகரத்தால் மூடப்பட்டிருக்கும் அதன் மேற்கூரை பிரிக்கப்பட்டு தேரோட்டம் முடிந்த பின்னர் மீண்டும் தகரத்தை கொண்டு மேற்கூரையானது மூடப்பட்டது. அதன் பின்னர் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தேரின் அழகினைக் காண முடியவில்லை என்ற கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசின் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் இந்த தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி கீழ்ப்பகுதியில் இருந்து சுமார் 8 அடி உயரத்திற்கு தகரம் கொண்டும், அதன் மேல் 30 அடி உயரத்திற்கு கண்ணாடி கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆழித்தேர் இருந்து வரும் இடத்தில் மிகவும் குறுகலான சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது தொடர்பான செய்தி தினகரனில் கடந்த 9ம் தேதி படத்துடன் வெளியிடப்பட்டது. ஆனால், இது குறித்து நகராட்சி நிர்வாகமோ, நெடுஞ்சாலைத்துறையினரோ அல்லது கோயில் நிர்வாகமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்றிரவு கனரக ராட்சத இரும்பு குழாய்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று இந்த ஆழித்தேர் கூண்டின் மீது மோதியதில் அதன் கீழ்ப்பகுதி தகரம் சேதமடைந்தது.

இதை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அந்த லாரியை மடக்கி பிடித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தபோது அந்த லாரியானது கல்கத்தாவிலிருந்து நாகை மாவட்டம் தேவூர் பகுதியில் இயங்கிவரும் பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு உயர்மட்ட மின்விளக்குகளை அமைப்பதற்காக ராட்சத பைப்புகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து லாரி டிரைவர் கொல்கத்தாவை சேர்ந்த மாதா பிரான் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Larry ,
× RELATED லாரி மோதி மாணவர் பலி