தனியார் பள்ளி கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, ஜன.19: தமிழ்நாடு தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில், பள்ளிகள் திறப்பு குறித்து தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம், மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் தலைமையில், தர்மபுரி விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. செயல் தலைவர் சக்திவேல் வரவேற்றார். கூட்டத்தில் பள்ளி கல்வி இணை செயலாளர் சுகன்யா, முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், செயலாளர் சுதாகர், பொருளாளர் நடராஜன், மனோகரன், முன்னாள் எம்எல்ஏ குப்புசாமி, ஸ்டான்லி முருகேசன், பாலக்கோடு வித்யா மந்திர் பள்ளி நிர்வாகி கோவிந்தராஜ், ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி நிர்வாகி வேடியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாநில பொது செயலாளர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:

கொரோனாவால் கடந்த 10 மாதம் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டது. கொரோனா தொற்று குறைந்துள்ளதால், 90 சதவீத பெற்றோர்கள் பள்ளி திறக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். இதையடுத்து இன்று (19ம் தேதி) அரசின் நெறிமுறைகளுடன் பள்ளி திறக்கப்படுகிறது. தமிழகத்தில் 1046 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு படிக்கும் 20லட்சம் மாணவர்களுக்கு, 40 சதவீத பாடம் குறைக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. நிபந்தனைகள் இல்லாமல் பள்ளி வானங்கள் இயக்க அனுமதிக்க வேண்டும். பள்ளிகள் திறக்காமல் இருந்ததால், சொத்துவரி, மின் கட்டணம் செலுத்த விலக்கு அளிக்க வேண்டும். இல்லையென்றால் காலஅவகாசம் அளிக்க வேண்டும். பள்ளியின் முதல்நாளில் பள்ளி வாகனங்கள் இயக்க சாத்தியம் இல்லை. இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

Related Stories:

>