×

கொல்கத்தாவில் மெஸ்ஸியை பார்க்க முடியாததால் கால்பந்து ரசிகர்கள் வன்முறை: போலீசார் தடியடி

கொல்கத்தா: கொல்கத்தாவில் மெஸ்ஸியை பார்க்க முடியாததால் கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. கொல்கத்தாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி வருகை தந்துள்ளார். ‘GOAT இந்தியா டூர் 2025′-ன் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார். கொல்கத்தாவில் தனது சிலையை காணொலி மூலம் திறந்துவைத்த பின், சால்ட் லேக் ஸ்டேடியத்தில் ரசிகர்களை சந்தித்தார். நீண்ட நேரம் காத்திருந்து மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்கள், நாற்காலிகளை தூக்கி வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.

மெஸ்ஸி மேடைக்கு வந்து 20 நிமிடங்கள் ஆகியும் முக்கிய பிரமுகர்கள் அவரை சூழ்ந்து கொண்டிருந்தால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். மைதானத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த டெண்டுகளை ரசிகர்கள் சூறையாடினர். கலவரம் நடந்த இடம் போல் கால்பந்து மைதானம் மாறியது. சால்ட் லேக் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய நிலையில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. மைதானத்தில் வன்முறையில் ஈடுபட்ட கால்பந்து ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே மெஸ்ஸி புறப்பட்டுச் சென்றார்.

Tags : Messi ,Kolkata ,GOAT India Tour 2025′ ,
× RELATED புதிய தொழிலாளர் சட்டங்கள் விவகாரம்;...