×

தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் வாங்கும் டெண்டருக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி நடந்து வருகிறது. கருத்தடை செய்யப்பட்ட நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, 2,40,000 மைக்ரோ சிப் வாங்குவதற்காக தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலம் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் மொத்தம் ஐந்து நிறுவனங்கள் கலந்து கொண்டன. விதிமுறைகளை பூர்த்தி செய்யாததால் நான்கு நிறுவனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டன. டெண்டரில் கலந்துகொண்ட எக்ஸிலர் இன்னோவேடிவ் சொல்யூஷன் என்ற நிறுவனம் குறைந்த விலைப்புள்ளிகளுடன் தகுதி உள்ள நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.

இதே நிறுவனம் ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் வழங்கி வருகிறது. இந்த முதல் டெண்டரை ரத்து செய்யாமல் திடீரென தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை இரண்டாவது டெண்டருக்கு அறிவிப்பு வெளியிட்டது. இதில், கடந்த டெண்டரில் விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் தகுதி இழப்பு செய்யப்பட்ட  துர்கா மெடிக்கல் சொல்யூஷன் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது முறை டெண்டர் அறிவிக்கப்பட்ட பிறகு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீனவர் நலத்துறை அரசு செயலர் தலைமையிலான குழு முதல் டெண்டரை ரத்து செய்தது.

இதையடுத்து, டெண்டரை எதிர்த்து எக்ஸிலர் இன்னோவேடிவ் சொல்யூஷன் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், டெண்டர் சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக கூறி மைக்ரோ சிப் வாங்கும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

Tags : Court ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Livestock Development… ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...