புழல், டிச.13: புழல் தண்டனை சிறையில் சுமார் 1300க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு, போதைப்பொருட்கள் மற்றும் செல்போன்கள் பயன்படுத்தப்படுவதாக சிறை துறையினருக்கு புகார்கள் வந்ததன. அதன் அடிப்படையில், நேற்று சிறை காவலர்கள் கைதிகள் அறைகளில் சோதனை செய்தனர். இந்நிலையில், அம்பத்தூர் – புதூர் பிரதான சாலை சார்ந்த சஞ்சய் (24) என்பவர், ஆள் கடத்தல் வழக்கில் தண்டனை இந்த சிறையில் உள்ளார். இவரிடம், போலீசார் சோதனை செய்தபோது, இவர் வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர். அதில், இதே அறையில் உள்ள சென்னை கொத்தவால்சாவடியை சேர்ந்த அஜித் (31) என்பவர், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான் செல்போனை வழங்கினார் என கூறினார். அதன்பேரில் விசாரித்ததில், தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி ராஜேஸ்வரன் (எ) கோரை பள்ளம் ராஜேஷ் (31) என்பவரிடம் சென்று விசாரித்தபோது, ஒருவர் ஒருவரை மாற்றி சொன்னதின் பேரில் மூவரையும் நேரடியாக விசாரணை செய்தனர். அப்போது, அஜித் என்ற கைதி, ஆவேசமாக பேசி உன்னை என்ன பண்ணுகிறேன் என்று பாருங்கள் என ஒருமையில் பேசி, அருகில் இருந்த சிறை காவலர் பாபு ராஜனை தாக்கி, கீழே தள்ளி விட்டார். அதிர்ச்சியடைந்த மற்ற சிறை காவலர்கள், அவரை மீட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து சிறை ஜெய்லர் முருகேசன், புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
