வேதாரண்யம் பகுதியில் புயலுக்கு தப்பிய சம்பா பயிர் கனமழைக்கு அழுகி சேதம்

வேதாரண்யம், ஜன.19: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி நடைபெற்றது. கடந்த வாரம் பெய்த கன மழையால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப்போனது. பல இடங்களில் நீரில் முழ்கிய நெற்கதிர்கள் முளைக்க தொடங்கிவிட்டன. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். மானாவாரி பகுதியான தாமரைபுலத்தில் மழையால் வயல்களில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. வயலில் தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றி பயிரை காப்பாற்ற போராடி வருகின்றனர். வயல்களுக்கு தண்ணீர் இரைத்து நெற்பயிர்களை காப்பாற்றிய காலம் மாற்றி தற்போது நெற்பயிரை காப்பாற்ற வயல்களில் தேங்கி நீரை மோட்டார் வைத்து இறத்து வருகின்றனர்.

தலைஞாயிறு, வேதாரண்யம் கரியாப்பட்டினம், செட்டிபுலம், வண்டல், குண்டுரான்வெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சுமார் 2 முதல் 3அடி மழை நீர் தேங்கி மூழ்கிக் கிடக்கின்றன. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது என்ற பழமொழிக்கு ஏற்ப விளைந்த நெல்லை கரை சேர்க்க முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். வயலில் தண்ணீரில் மூழ்கி கிடக்கும் நெற்கதிர்களை அறுவடை செய்து, கத்தையாக கட்டி நீண்ட கயிறு உதவியுடன் பல வயல்களை கடந்து மேடான பகுதிகளுக்கு இழுத்து சென்று கரை சேர்த்து வருகின்றனர். பின்னர் அந்த பயிர்களை தார் சாலைகளில் காயவைத்து, நெல் மணிகளை பிரித்தெடுக்கின்றனர். புயலில் இருந்து தப்பித்து கடும் மழைக்கு சேதமான நெற்பயிர்களை பார்த்து விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். மழையால் பாதித்த சம்பா பயிருக்கு முழு கணக்கீடு செய்து செலவுத்தொகை ஏக்கருக்கு ரூ.30,000 வழங்கினால் தான் எங்களால் அடுத்த முறை விவசாயம் செய்ய முடியும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கூறினர்.

Related Stories:

>