×

டெல்டா பகுதியை தேசிய பேரிடராக அறிவித்து

தஞ்சை, ஜன.17: டெல்டா பகுதியை தேசிய பேரிடராக அறிவித்து விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து வாழ்வாதாரம் காக்க ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுகிய நெற்பயிர்களுடன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க.சண்முகசுந்தரம், விவசாயிகள் வாழ்வுரிமை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பனசை அரங்கன், அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில இணை செயலாளர் தங்கராசு உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டரிடம் அழுகிய நெற்பயிர்களுடன் அளித்த மனுவில், தஞ்சை டெல்டா பகுதிகளில் 3.50 லட்சம் எக்டேர் நிலங்களுக்கு மேல் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் எக்டேருக்கு வழங்குவது என்பது ஏற்புடையதாக இல்லை. விவசாயிகள் பலர் கடந்த 3 மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் அழுகிய நிலையில் மீண்டும் நடவு செய்து இரட்டிப்பு செலவு செய்துள்ளனர். ஏற்கனவே பயிர்கள் அழுகி நஷ்டமடைந்த நிலையில் மீண்டும் நடவு செய்தும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே வெயில், மழை, பனி, புயல், பேரிடர், வறட்சி என பல்வேறு சோதனைகளை கடந்து தொடர்ந்து விவசாயிகள் படும் துயர் சொல்லிமாளாது. விதை செலவு, பயிர் நடவு செலவு, பயிர்கள் பராமரிப்பு செலவு, உரச்செலவுகள், அறுவடை கூலி உயர்வு என பல வகைகளில் பாதிக்கப்பட்டும் விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நிலையை உயர்த்துவதற்கு எந்தவித திட்டங்களும் இல்லாதது அனைத்து விவசாயிகள் மத்தியிலும் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் தொடர்ந்து வருத்தமளிக்கின்ற செயலாக உள்ளது.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என கோரிக்கை வைக்கும்போது அரசு உடனடியாக களம் இறங்கி துயர் துடைக்க நடவடிக்கை எடுப்பது போல் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் விவசாயத்தை நம்பி உள்ள அனைத்து தொழில்களும் முடங்கும் பெரிய அபாயம் உள்ளதையும் கருத்தில் கொண்டு விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நெற்பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும். இதற்கு தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும். பயிர் செய்த கடலை, உளுந்து பாரம்பரிய நெல் ரகங்கள் என இயற்கை பேரிடரால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு கஜாவை விட கடுமையான பாதிப்பு. எனவே தேசிய பேரிடராக அறிவித்து டெல்டா விவசாயிகளின் துயரைத் துடைக்க உடனடி நடவடிக்கையாக விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : delta area ,disaster ,
× RELATED மதுரை விமான நிலையத்தில் பேரிடர்...