புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி பணி முதல் கட்டமாக 10,199 நபர்களுக்கு வழங்க திட்டம்

புதுக்கோட்டை, ஜன.17:புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன் களப் பணியாளர்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியினை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்ரி பார்வையிட்டார். அப்போது கலெக்டர் உமமகேஸ்வரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் கொரோனாபரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இன்று (நேற்று) புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,270 முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியை பார்வையிட்டு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று அறந்தாங்கி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 358 முன்களப் பணியாளர்களுக்கும், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் 224 முன்களப் பணியாளர்களுக்கும், திருவரங்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 240 முன்களப் பணியாளர்களுக்கும் என புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் 2,092 முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கோவிசீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் இரண்டு தனித்தனி இடங்களில் போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 10,199 முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டு அவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தேவையான 6,900 கோவிசீல்டு கொரோனா தடுப்பூசி மருந்தும் 1,100 கோவேக்சின் தடுப்பூசி மருந்தும் என ஆக மொத்தம் 8,000 தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளதுடன் தடுப்பூசி போடுவது தொடர்பாக பல்வேறு கட்டங்களாக ஏற்கனவே மாதிரி ஒத்திகைகள் பார்க்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற திங்கட்கிழமை முதல் 75 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 13 அரசு மருத்துவமனைகளிலும் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. எனவே முன்களப்பணியாளர்கள் அனைவரும் எவ்வித அச்சமின்றி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, பொது சுகாதாரத் துணை இயக்குநர் கலைவாணி, அரசு மருத்துவக்கல்லூரி நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி, மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>