×

கிரிக்கெட்டை விட வேறு எதையும் அதிகம் நேசிக்கவில்லை: எல்லா பிரச்னைகளையும் இந்திய ஜெர்சி ஒதுக்கி வைத்துவிடும்; திருமணம் ரத்தான பின் முதல்முறையாக மந்தனா பேச்சு

புதுடெல்லி: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக்கோப்பை வெல்வதில் முக்கிய பங்காற்றினார். இவரும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலும் காதலித்து வந்த நிலையில், உலகக்கோப்பை வென்ற மும்பை டி.ஒய் பட்டேல் மைதானத்தில் மோதிரம் மாற்றி வித்தியாசமான முறையில் நிச்சயம் செய்து கொண்டனர். இதையடுத்து, இவர்களது திருமணம் கடந்த நவ. 23ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

மந்தனாவின் தந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருமணம் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், காதலன் பாலஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பேசியதாகக் கூறப்படும் ‘ஸ்கிரீன்ஷாட்கள்’ இணையத்தில் வைரலானது. இதனால், பலாஸ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்கள் நீக்கிய மந்தனா, தனது திருணம் ரத்து செய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். திருமணம் ரத்து செய்யப்பட்ட பின் மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த தொடங்கி உள்ள மந்தனா சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘கிரிக்கெட்டை விட நான் வேறு எதையும் அதிகமாக நேசிப்பதாக எனக்கு தோன்றவில்லை. இந்திய ஜெர்சியை அணிவதுதான் எங்களை இயக்கும் உந்துசக்தி. எல்லா பிரச்னைகளையும் ஒதுக்கி வைத்துவிடும். அந்த ஒரு எண்ணமே வாழ்க்கையில் கவனம் செலுத்த உதவுகிறது. குழந்தையாக இருந்தபோதிலிருந்தே, பேட்டிங் மீதான அந்த வெறி எப்போதும் இருந்தது. அதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் என் மனதில், நான் எப்போதும் ஒரு உலக சாம்பியன் என்று அழைக்கப்பட வேண்டும் என்றே விரும்பினேன். இத்தனை ஆண்டுகால் போராட்டத்துக்கான வெகுமதியாக உலகக்கோப்பை வெற்றியை பார்க்கிறேன். உலகக்கோப்பை வெற்றி எங்களுக்கு மட்டுமில்லாது எங்கள் சீனியர்களுக்கும் பெருமை சேர்த்தது’ என்றார். இலங்கை அணியுடன் நடைபெற உள்ள மகளிர் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா இடம் பெற்று உள்ளார். இதற்கான பயிற்சியில் மந்தனா ஈடுபட்டு வருகிறார்.

Tags : Mandhana ,New Delhi ,Smriti Mandhana ,Indian team ,Women's World Cup ,Palash Muchhal ,Madhya Pradesh ,World Cup ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...