×

சனீஸ்வரபகவான் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

காரைக்கால், ஜன.17: பொங்கல் விடுமுறை மற்றும் காணும் பொங்கலைமுன்னிட்டு நேற்று திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அனைவருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நேற்றுமுன்தினம் (15ம் தேதி) உழவர் திருநாள், நேற்று (16ம் தேதி) காணும் பொங்கல் மற்றும் பொங்கல் விடுமுறை என்பதால் சனி பகவானை தரிசிக்க திரளான பக்தர்கள் திருநள்ளாறு வந்தனர். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே சனிபகவான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய முடியும். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

புதுச்சேரி அரசு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் தேவஸ்தான அறிவுறுத்தலின்படி நேற்று அதிகாலை 3:30 மணி முதல் பக்தர்கள் அனைவருக்கும் காமராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிகேஐஇடி நலப்பணித்திட்ட மாணவர்கள் கொரோனா பரவுதலை தடுக்கும்பேரில் கோவிட் 19 திட்டத்தின் கீழ் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் கிருமிநாசினியான சானிடைசர் அனைவர் கையிலும் முதலில் தெளிக்கப்பட்டு பின்பு அனுமதிக்கப்பட்டனர். காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் ஆதர்ஷ், பாஸ்கரன் ஆகியோரின் ஆணைக்கிணங்க காரைக்கால் அரசு அலுவலர்களுடன் சேர்ந்து பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியின் (பிகேஐஇடி) பேராசிரியர் முனைவர்.சதீஷ்குமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் தாமோதரன் முன்னிலையில் ஆன்லைன் பாஸ் (இ.பாஸ்) வழங்கப்படுவதை கண்காணித்தனர். இவர்களுடன் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி, அவ்வையார் மகளிர் கலைக்கல்லூரி, புதுச்சேரி பல்கலைக்கழகம், தேசிய தொழில்நுட்ப கல்லூரி (என்ஐடி), காரைக்கால் ஆசிரியர்கள், மாணவர்கள் இ.பாஸ் வழங்கினர்.

Tags : Swami Darshan ,devotees ,Saneeswara Bhagavan Temple ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி