இரவுகாட்சி சினிமா பார்க்கசென்றவரின் வீட்டில் பூட்டை உடைத்து 9பவுன் நகை, பணம் திருட்டு

நாகை, ஜன.17: கீழ்வேளூர் அருகே இரவுகாட்சி சினிமா பார்க்க சென்றவரின் வீட்டில் பூட்டை உடைத்து 9 பவுன் நகை மற்றும் ரூ.55ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் குயவர் தெருவை சேர்ந்தவர் வீரமணி மகன் வீரமுத்து (24). லோடு ஆட்டோ வைத்துள்ளார். இவர் தனது தாயார் விஜயலெட்சுமியுடன் வசித்து வருகிறார். நேற்று மதியம் விஜயலெட்சுமி திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். வீரமுத்து இரவு 10 மணி அளவில் திருவாரூரில் உள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க வீட்டை பூட்டி விட்டு சென்றார். நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறநது கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள், பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அறையில் இருந்த மரப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் நகை, ரூ.55 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கீழ்வேளூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் வீட்டில் இருந்து வீட்டின் பின் பக்கம் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. கீழ்வேளூர் பகுதியில் ஒரே வாரத்தில் அகரக்கடம்பனூர், சிக்கல், தேவூர் ஆகிய 3 இடங்களில் தொடர் திருட்டு நடைபெற்று வருவதால் பொது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>