×

2 மாதங்களாக பூட்டி கிடக்கும் ஆலைகள் சிவகாசியில் வேலையின்றி தவிக்கும் பட்டாசு தொழிலாளர்கள் நலவாரியத்தை உடனே செயல்படுத்த கோரிக்கை

சிவகாசி, ஜன. 17 : சிவகாசியில் 2 மாதங்களாக பட்டாசு ஆலைகள் பூட்டப்பட்டு கிடப்பதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே நலவாரியத்தை உடனே செயல்படுத்தி நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1,070க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு 5 லட்சம் தொழிலாளர்கள் நேரிடையாகவும், 3 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.  இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுள் இந்தியா முழுவதிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

வடமாநில வியாபாரிகள் தீபாவளி பண்டிகை முடிந்து ஒரு சில மாதங்களில் அடுத்த ஆண்டுக்கான ஆர்டர்கள் வழங்கி முன் பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆர்டரின் பேரில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் உற்பத்தி பணியில் ஈடுபடுவர். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரனமாக புதுடில்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட 7 மாநிலங்களில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அம்மாநில அரசுகள் தடை வதித்தன. இதன் காரணமாக ரூ.800 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் வடமாநில வியாபாரிகள் இந்த ஆண்டு போதிய ஆர்டர்களை வழங்காததால், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆலைகளை திறப்பதில் காலதாமதப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக தேசிய சுற்று சூழல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் (நீரி) பசுமை பட்டாசுக்கான உரிமம் பெற கோரி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதில் ஒரு சில பெரிய நிறுவனங்கள் ஆலையில் உற்பத்தி செய்யும் அனைத்து பட்டாசுகளுக்கும் நீரியிடம் உரிமம் பெற வேண்டும் என கூறி வருகின்றனர்.  ஆனால் சிறிய பட்டாசு ஆலை உரிமையாளர்கள், அதற்கு அதிக பணம் செலவாகும் எனக்கூறி ஏற்க மறுத்து வருகின்றனர். இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

மேலும் தற்போது சிவகாசி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும் பட்டாசு ஆலைகளை திறக்க முடியாத சூழல் உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தீபாவளி பண்டிகை முடிந்து 60 நாட்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் பூட்டி கிடப்பதால் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி பரிதவித்து வருகின்றனர். தமிழக அரசு பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு தனியாக நல வாரியம் அமைத்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பட்டாசு ஆலை தொழிலாளர்களை இந்த நலவாரியத்தில்  உறுப்பினர்களாக சேர்த்து,  பட்டாசு ஆலைகள் பூட்டி கிடக்கும் நாட்களில் தொழிலாளர்களுக்கு உடனடியாக  நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Factories ,Sivakasi ,firecracker workers ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...