×

வீடுகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றவில்லை நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்கள் உண்ணாவிரதம் சாயல்குடியில் பரபரப்பு

சாயல்குடி. ஜன.17: கலெக்டர் உத்தரவிட்டும் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள தண்ணீரை மூன்று நாட்களாகியும் அதிகாரிகள் அகற்றாததை கண்டித்து சாயல்குடி நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 5 நாட்களாக சாயல்குடி பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாயல்குடி அண்ணாநகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, துரைச்சாமிபுரம் பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. 4 வீடுகள் இடிந்துள்ளது. குப்பைகள் அகற்றப்படாததால் மழைநீருடன், கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனைக் கண்டித்து 14ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

இதனையடுத்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், அண்ணாநகர் பகுதியை நேரில் ஆய்வு செய்து, தண்ணீரை வெளியேற்ற வருவாய்துறை, பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அத்துடன் பொதுமக்களையும் சந்தித்து ஆறுதல் கூறி, தண்ணீரை முழுமையாக வெளியேறும் வரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்குமாறு அறிவுறுத்தினர். இதன்பேரில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மழைநீரை ெவளியேற்ற கொண்டு வரப்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் மழைநீரை வெளியேற்ற வருவாய்த்துறை, பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்கள் நேற்று மதிய உணவை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கலெக்டர் உத்தரவிட்டும் தாசில்தார், துணை தாசில்தார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குளிர், கொசுக்கொடி அதிகம் இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் பள்ளியில் தூங்க முடியவில்லை. வீடுகளை சூழ்ந்து கிடக்கும் தண்ணீரை வெளியேற்றி இருந்தால் வீடுகளுக்கு சென்றிருப்போம். ஆனால் கலெக்டரின் உத்தரவையும் அதிகாரிகள் மதிக்கவில்லை. எனவே, தண்ணீரை முழுமையாக வெளியேற்றும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்றனர். கடலாடி தாசில்தார் சீனிவாசன் கூறுகையில், தண்ணீர் செல்ல கால்வாய் வெட்டப்பட்டு, அதன் வழியே வெளியேறி கொண்டு தான் இருக்கிறது. துணை தாசில்தார் மீதுள்ள புகார் குறித்து விசாரிக்கிறேன் என்றார். உணவை புறக்கணித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

Tags : Civilians ,relief camp ,Sayalgudi ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு டன் பீடி இலைகள் பறிமுதல்