×

தைப் பொங்கலையொட்டி பழநி அருகே சலங்கை மாடு ஆட்டம்

பழநி, ஜன. 17: பழநியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காவலப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சலங்கை மாடு ஆட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக இக்கிராமத்தில் சலங்கை மாடு ஆட்டம் நடத்தப்பட்டது. இவ்வூரில் உள்ள காளியம்மனுக்கு நேர்ந்து விடப்பட்ட காளைகளை அலங்கரித்து கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, அலங்கார மணிகள் கட்டப்பட்டு ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.

ஊரின் மையப்பகுதியில் வாசிக்கப்படும் வாத்தியங்களுக்கேற்ப அசைந்தாடியபடி சுற்றி வரவைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து வெள்ளை நிற ஆடை அணிந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள் காலில் சலங்கை அணிந்தபடி நடனமாடும் நிகழ்ச்சி நடந்தது. இதனைக் காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காவலப்பட்டி கிராமத்தில் குவிந்திருந்தனர். சலங்கை மாட்டுடன் ஆடுபவர்களிடம் அருள் கேக்கும் நிகழ்வும் ஆங்காங்கே நடந்தது. இது குறித்து காவலப்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரன் கூறியதாவது: பொங்கல் பண்டிகை காலத்தில் நடந்து வரும் இந்நிகழ்ச்சி சுமார் 200 வருடங்களாக நடந்து வருகிறது. இதற்காக காளைக்கன்றை நேர்ந்து, அவைகளை வனப்பகுதிக்குள் விட்டுவிடுவோம். பொங்கல் பண்டிகைக்கு 1 மாத காலத்திற்கு முன்பு காளையை அழைத்து வந்து பயிற்சி அளிப்போம். பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டுவிடுவோம். இவ்விழா நன்றாக நடந்தால் வறட்சி நீங்கி, விவசாயம் வளரும் என்பது ஐதீகம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Palani ,Thai ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்