×

பழநி அருகே நீரில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் போக்குவரத்துக்கு கிராம மக்கள் அவதி

பழநி, ஜன. 17:  பழநி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பழநி பகுதியில் உள்ள அணைகள், குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால், நீர்நிலைகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. பழநி அருகே 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணை முழுவதும் நிரம்பி விட்டது. இந்த அணையில் இருந்து தற்போது அதிகளவிலான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பூஞ்சோலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இக்கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன.

தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் கிராம மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அனைவரும் தற்போது குதிரையாறு அணை வழியாக தங்கள் கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு சென்று வருகின்றனர். அணைக்கட்டு வழியாக கிராமமக்கள் நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் தங்களது வீடுகளுக்கும், விவசாய நிலங்களுக்கும், பல கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த தரைப்பாலத்தை விரைவில் சரி செய்ய வேண்டுமென பொதுமக்களும், விவசாய தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்