தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார்

குன்றத்தூர்: தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில், பழிக்குப்பழியாக வாலிபரை சரமாரியாக வெட்டிவிட்டு சிலர் தப்பி சென்றனர். ஆனால், வெட்டு காயத்துடன் வாலிபர், உயிர் பிழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், பரணிபுத்தூர் அருகே சாலையின் அருகே இருந்த முட்புதரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒரு வாலிபர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டார். இதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாங்காடு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த வாலிபரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரிடம் விசாரித்தனர். அதில், வியாசர்பாடியை சேர்ந்த சூர்யா (எ) சூர்யபிரகாஷ் (19). வியாசர்பாடியில் பிரசாந்த் என்பவர் கொலை வழக்கில் தொடர்புடையவர். கடந்த 3 நாட்களுக்கு முன் அதே கொலை வழக்கில் தொடர்புடைய இவரது நண்பர் பாலச்சந்தர் என்பவர் சாலை விபத்தில் இறந்தார். அவரது இறப்புக்கு சூர்யபிரகாஷ் செல்லவில்லை. பிரசாந்த் கொலைக்கு பழி வாங்குவதற்காக அவரது உறவினர்கள், இருவரையும் தேடி வந்தனர். பாலசந்தர் இறந்துவிட்டதால் சூர்யபிரகாஷை தீர்த்துக்கட்ட தீவிரமாக தேடினர். இதற்கிடையில் சூர்யபிரகாஷ், தாம்பரத்தில் தங்கி விட்டார். இதையறிந்த எதிர் கோஷ்டியினர், நேற்று முன்தினம் தாம்பரம் சென்று, சூர்யபிரகாஷை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் அவரை, ஆட்டோவில் ஏற்றி கொண்டு தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்றனர். அப்போது, சாலையின் ஓரமாக இருந்த முட்புதரில் வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சூர்யபிரகாஷ், மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவர்கள், இவர் இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர், சூர்யபிரகாஷ் உயிர் பிழைத்து வந்து, வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டு மருத்துவமனையில் சேர்ந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட தீனா, விக்ரம் உள்பட 5 பேரை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையின் ஓரமாக இருந்த முட்புதரில் வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சூர்யபிரகாஷ், மயங்கி விழுந்தார்

Related Stories:

>