×

பொங்கல் விழாவில் நாட்டு மாடுகள் அறிமுகம்

சேலம், ஜன.17:  பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் குமரகிரியில் உள்ள கோசாலா சார்பில் நாட்டினங்கள் அறிமுகமும், ஆதரவு கோரும் நிகழ்ச்சியும், அம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு ரவுண்டானா அருகில் நடந்தது. குமரகிரி கோசாலா தலைவர் சக்திவேல் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் ராமன், பொங்கல் விழாவை துவக்கி வைத்து, நாட்டின மாடுகளை பார்வையிட்டார். நாட்டு மாடுகள் வளர்ப்பு குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு வகையான காளை மற்றும் பசுமாடுகள் பொதுமக்கள் பார்வைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. காங்கேயம்காளை, மயிலக்காளை, ஓங்கோல் இனகாளை, புலிக்குளம், இருப்பாளி இனம் என 40க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் இருந்தது. இதுகுறித்து சக்திவேல் எம்எல்ஏ கூறுகையில்,  ‘‘அழிந்து, மறைந்துவரும் நாட்டின மாடுகளை  பொதுமக்கள் தெரிந்து கொண்டு வளர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின மாடுகள் அழிவதை தடுக்க தமிழக அரசு கடனுதவி, அதற்கான சிகிச்சை மையங்களை அமைத்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை தலைவாசலில் அரசு அமைத்து வருகிறது,’ என்றார்.
நிகழ்ச்சியில் டிஆர்ஓ திவாகர், திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், அதிமுக பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, ஜெகதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Introduction ,Pongal ,festival ,
× RELATED பங்குனி திருவிழாவில் குதிரை வாகனத்தில் அம்மன் நகர் வலம்