×

19ம் தேதி பள்ளிகள் திறப்பு வகுப்பறையில் 25 மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்க நடவடிக்கை

ஊட்டி,ஜன.17: வரும் 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில்ல, முன்னெச்சரிக்கை நவடிக்கை மேற்கொள்வது குறித்து அரசு துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.  வரும் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உள்ளாட்சி துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யாபேசுகையில், தமிழக அரசு வருகிற 19ம் தேதி முதல் 10ம் மற்றும் 12ம் வகுப்புகள் துவங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ., ஆகிய 218 பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதில் 10ம் வகுப்பு 9 ஆயிரத்து 636, மாணவ, மாணவிகளும், 12ம் வகுப்பில் 8 ஆயிரத்து398 மாணவ, மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 034 மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தர உள்ளார்கள். அரசு தெரிவித்துள்ளப்படி கொரோனா தொற்று வழிமுறைகளை சம்மந்தப்பட்ட பள்ளிகளில் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். அனைத்து மாணவர்களும், ஆசிரியர்கள், பணியாளர்களும் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் முககவசங்களை கட்டாயமாக அணிவதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

 பள்ளிகளில் சானிடைசர் மூலம் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் மூலம் மாணவ, மாணவிகளின் உடல் வெப்பநிலையை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக,கழிப்பறைகளை பள்ளி திறப்பதற்கு முன்பே சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஒரு வகுப்பறையில் 25 மாணவ, மாணவிகளை அமர்த்தி கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கூடுதலாக மாணவர்கள் இருப்பின் மற்றொரு வகுப்பறையை தயார் செய்து கல்வி கற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்று அறிகுறி ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட மாணவ, மாணவிகளை தனியாக ஒரு அறையில் அமர வைத்து, பின்னர் சம்மந்தப்பட்ட சுகாதாரத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் உணவு உண்ணும் நேரத்தில் முககவசத்தை அப்புறப்படுத்தி மீண்டும் அணிவதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

மேலும், பள்ளிகள் திறக்கும் நாளிலிருந்து, மாணவ, மாணவிகள் பெயர், வகுப்பு, உடல் வெப்பநிலை, ஏதேனும் அறிகுறிகள், பல்ஸ் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட விவரங்களை கொண்ட பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளிகளில் தேவையான
அளவு குப்பை தொட்டிகள் வைத்திருக்க வேண்டும்.  கொரோனா தொற்று நோய் குறித்து அவர்களிடையே ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும். நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்த பின் குடிநீர் வழங்கிட உள்ளாட்சி துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சம்மந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அலுவலர்கள், பள்ளி கல்வி துறை அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும், என்றார். கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன், மருத்துவம பணிகள் இணை இயக்குநர் பழனிசாமி, துணை இயக்குநா்(சுகாதாரப்பணிகள்) பாலுசாமி, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

Tags : classroom ,
× RELATED போலீஸ் விசாரணை உப்பிலியபுரம்...