ஓய்வூதியம் முறையாக வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

கோவை, ஜன. 17: கோவை மதுக்கரை ஒன்றியத்தில் சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் முறையாக வழங்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் சத்துணவு ஊழியர்கள் என 550-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களுக்கு, மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அனைத்து ஒன்றியங்களிலும் 31-ம் தேதி ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், மதுக்கரை ஒன்றியத்தில் முறையாக ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை எனவும், மிகவும் காலதாமதமாக ஊதியம் வழங்கப்படுவதாகவும் ஓய்வூதியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து ஓய்வூதியர்கள் கூறியதாவது: மதுக்கரை ஒன்றியத்தில் 300 ஓய்வூதியர்கள் உள்ளனர். அனைத்து ஒன்றியத்திலும் உள்ள நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 31-ம் தேதி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால், எங்கள் ஒன்றியத்தில் 18-ம் தேதிக்கு பின் வழங்குகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் அளிப்பதில்லை. புகார் அளித்தாலும் நடவடிக்கையில்லை. காலதாமதமாக ஓய்வூதியம் கிடைப்பாதல் மருத்துவம் உள்ளிட்ட செலவுக்கு கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு அறிவித்த பொங்கல் பரிசு ரூ.500 கூட வந்து சேரவில்லை. எனவே, மதுக்கரை ஒன்றியத்தில் உள்ள சத்துணவு ஓய்வூதியர்களுக்கு முறையாக 31-ம் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>